போயஸ் கார்டனில் நடப்பது என்ன? பிரதமரிடம் விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்துவேன் ஜெ.தீபா பேட்டி


போயஸ் கார்டனில் நடப்பது என்ன? பிரதமரிடம் விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்துவேன் ஜெ.தீபா பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2017 10:00 PM GMT (Updated: 16 Jun 2017 9:01 PM GMT)

போயஸ் கார்டனில் நடப்பது என்ன? என்பது குறித்து விசாரணை கமிஷன் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று ஜெ.தீபா கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் தீபா சென்னை தியாகராயநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தீபா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தேர்தல் ஆணையத்தில் எத்தனை பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய உள்ளர்கள்?

பதில்:- இன்னும் 2 லட்சம் பிரமாண பத்திரங்கள் எங்களால் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் ஆணையம் எங்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கித் தந்தால் கூடுதலாக தாக்கல் செய்வோம்.

கேள்வி:- போயஸ் கார்டனில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக பிரதமரை சந்திக்க போவதாக கூறியிருந்தீர்கள்? எப்போது சந்திக்கப்போகிறீர்கள்?

பதில்: பிரதமரை சந்திக்க முறையாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அவருடைய அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நிச்சயம் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கிறோம். பிரதமரை சந்திக்கும் போது, போயஸ் கார்டனில் என்ன நடக்கிறது என்பது பற்றி விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்துவோம்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு

கேள்வி:- அ.தி.மு.க.வில் நானும், ஓ.பன்னீர்செல்வமும் இரு கரங்களாக செயல்படுவோம் என்று கூறியிருந்தீர்கள்? இந்த நிலையில் அ.தி.மு.க. எங்களுக்குத்தான் சொந்தம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது ஏன்?

பதில்: அப்போது என்னை சந்திக்க ஆரவாரத்துடன் வந்த தொண்டர்களை பார்த்து தீபா என்னுடன் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்து இருப்பார். நான் மரியாதை நிமித்தமாக தான் அவரை 2 முறை சந்தித்தேன். அதன் பிறகு பேச்சுவார்த்தை தொடரவில்லை. அவர்(ஓ.பி.எஸ்.) தனியாகவும், நான் தனியாகவும் தான் செயல்பட்டு வருகிறோம்.

கேள்வி:- அ.தி.மு.க.வையும், சின்னத்தையும் கைப்பற்றி கட்சியை வழிநடத்துவது தான் உங்கள் நோக்கமா?

பதில்:- இது என்னுடைய நோக்கம் என்று சொல்வதைவிட தொண்டர்களின் விருப்பம்.

கேள்வி:- தொண்டர்கள் விருப்பம் என்று சொன்னால் கூட ஒரு எம்.எல்.ஏ. கூட உங்கள் பக்கம் வராததற்கு என்ன காரணம்?

பதில்: எம்.எல்.ஏ.க்களை வைத்து மட்டும் கட்சியை வழிநடத்த முடியாது. தொண்டர்கள் இல்லை என்றால் கட்சியே கிடையாது. அவர்களுடைய பலம் தான் இந்த கட்சி. தொண்டர்களின் பலத்தால் தான் அ.தி.மு.க. உருவாகி இருக்கிறது. தொண்டர்கள் இல்லாமல் அ.தி.மு.க.வை நடத்த முடியாது.

தொண்டர்கள் ஆதரவு

கேள்வி:- உங்களையும், பன்னீர்செல்வத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, தொண்டர்கள், மக்கள் ஆதரவு அவருக்கு தான் இருக்கிறதே?

பதில்:- நிர்வாகிகள், பதவியில் இருப்பவர்கள் ஆதரவு மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. நிச்சயமாக 1½ கோடி தொண்டர்கள் ஆதரவு எனக்கு தான் இருக்கிறது. ஜெயலலிதா இடத்துக்கு நான் வரவேண்டும், கட்சியை நடத்த வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் தொண்டர்கள் இருக்கின்றனர்.

இவ்வாறு ஜெ.தீபா கூறினார். 

Next Story