புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு


புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 5 July 2017 10:45 PM GMT (Updated: 5 July 2017 6:12 PM GMT)

புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 நியமன உறுப்பினர்களை நியமிக்க யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டம் வழிவகை செய்கிறது. அதன்படி நியமன உறுப்பினர்களாக வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு கடந்த 23.6.2017 அன்று நியமித்து உத்தரவிட்டது.

மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிக்க முடியாது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு புறம்பாக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, புதுச்சேரி சட்டசபைக்கு நியமன உறுப்பினர்களாக 3 பேரை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வி.டி.கோபாலன் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசு, புதுச்சேரி தலைமை செயலாளர், நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Next Story