நீலகிரி வனப்பகுதியில் தென்பட்ட அரிய வகை வெள்ளை புலி
நீலகிரி அப்பர் பவானி வனப்பகுதியில் அரிய வகை வெள்ளை புலி தென்பட்டது.
மசினகுடி,
தமிழகத்திலேயே 60 சதவீத வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாக நீலகிரி திகழ்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரிக்கு சுற்றுலா வந்த வன விலங்கியல் ஆர்வலர் ஒருவர் தெற்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அப்பர் பவானி வனப்பகுதியில் ஒரு வெள்ளை நிற புலியை பார்த்து புகைப்படம் எடுத்து உள்ளார். அது குறித்த தகவலையும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளார்.நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் மஞ்சள் மற்றும் கருப்பு கோடுகளை கொண்ட புலிகளை மட்டுமே இதுவரை பார்த்து வந்த நிலையில், தற்போது வெள்ளை நிறத்தில் புலி ஒன்று தென்பட்டு இருப்பது வனத்துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சீனிவாச ரெட்டி கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் வெள்ளை நிற புலி தென்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த விளக்கம் அளிப்பது கட்டாயம் ஆகும். அந்த புலி நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் தான் தென்பட்டு உள்ளது.தற்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள புலிகளை போன்று தான் அது உள்ளது. அதனுடைய உடலில் ஏற்பட்ட மரபணு குறைபாடு காரணமாக தோல்கள் வெள்ளை நிறமாக மாறி இருக்கலாம். எனவே, இது வெள்ளை புலி இனத்தை சார்ந்தது தானா என்பதை 100 சதவீதம் உறுதி செய்யமுடியாது.
இந்த புலி குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளது. எனவே, அந்த புலி தென்பட்ட வனப்பகுதியில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதனை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேமராக்களில் அதன் உருவம் பதிவான பிறகுதான், அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறும் போது, நீலகிரி மாவட்டத்தில் வெள்ளை புலி இருக்க வாய்ப்பு கிடையாது. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் மட்டுமே வெள்ளை புலி உள்ளது. ஆனால் தற்போது நீலகிரியில் வெள்ளை புலியை பார்த்ததாக கூறுகிறார்கள். இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.