போரூர் ஏரியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்


போரூர் ஏரியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 July 2017 11:45 PM GMT (Updated: 12 July 2017 12:28 AM GMT)

போரூர் ஏரியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

சென்னை,

பருவமழை பொய்த்து போனதன் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறையாதவாறு தொடர்ந்து வழங்கிடும் வகையில் கூடுதல் நீர் ஆதாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டன.

போரூர் ஏரியிலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் வகையில், அந்த ஏரி நீரின் தரம் சென்னை குடிநீர் வாரியம், கிண்டி ‘கிங்’ இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பரிசோதனை நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டது.

இப்பரிசோதனைகளில் உரிய சுத்திகரிப்புக்கு பின் இந்த நீர் பயன்படுத்த உகந்தது என கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து குறைந்த திறன் கொண்ட மாதிரி சுத்திகரிப்பு நிலையத்திற்கான கருவிகள் வாங்கப்பட்டு சுத்திகரிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகளின், அடிப்படையில் தினசரி 40 லட்சம் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு வினியோகிக்க பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.1.85 கோடி திட்ட மதிப்பீட்டில் 100 நாட்களுக்கு தினசரி 40 லட்சம் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் 18.5.2017 அன்று தொடங்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் போரூர் ஏரியின் கரையில் 1,080 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போரூர் ஏரியின் மொத்த கொள்ளளவு 5 கோடி கன அடி ஆகும். இதில் தற்போது 1 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது.

தற்போதுள்ள நீர் இருப்பை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சுத்திகரிப்பு நிலையத்தில், ஏரியிலிருந்து நீரேற்ற 50 குதிரை திறன் கொண்ட இரண்டு பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. நீரின் மாசு நீக்குவதற்காக மூன்று கட்டங்களில் வடிகட்டி கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் துகள்கள் நிரப்பப்பட்ட 12 உயர் அழுத்த கலன்களும் அடங்கும்.

உயர் அழுத்த கலன்களில் நிரப்பப்பட்டுள்ள வடிகட்டி துகள்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்ல 250 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் 300 மீட்டர் நீளத்திற்கு பதிக்கப்பட்டு போரூர் ஏரியின் அருகில் செல்லும் வீராணம் பிரதான குழாயில் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனைத்து பணிகளும் நிறைவு பெற்றநிலையில், போரூர் ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் வீராணம் பிரதான குழாய் மூலம் போரூர் குடிநீர் வினியோக நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வளசரவாக்கம், கே.கே.நகர், ஆலந்தூர் பகுதியை சேர்ந்த மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் வறட்சி காலங்களில் மட்டுமின்றி நிரந்தரமாகவும் போரூர் ஏரியில் உள்ள நீரை பயன்படுத்தி, அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முன்னோடி திட்டமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story