எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
x
தினத்தந்தி 18 July 2017 4:15 AM IST (Updated: 18 July 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதேபோல் புதுக்குடி, ஏம்பவயல், ஆர்.புதுப்பட்டினம் உள்பட சுமார் 15 கடலோர கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியை சேர்ந்தவர் நாகூர்(வயது 50). இவருக்கு சொந்தமாக நாட்டுப்படகு உள்ளது. இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பவயல் மீனவ கிராமத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் ஏம்பவயல் கிராமத்தில் இருந்து நாகூர் மற்றும் நம்புதாளை பகுதியை சேர்ந்த செட்டி(35), பார்தீஸ்(30), சக்திவேல்(22) ஆகிய 4 பேரும் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், நாகூர் உள்ளிட்ட 4 பேரும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, அவர்களை சிறைபிடித்து நாட்டுப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story