10 வயது சிறுவன் காரில் கடத்தல்; காட்டாங்கொளத்தூரில் மீட்பு


10 வயது சிறுவன் காரில் கடத்தல்; காட்டாங்கொளத்தூரில் மீட்பு
x
தினத்தந்தி 20 July 2017 4:15 AM IST (Updated: 20 July 2017 4:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயலில் காரில் கடத்தப்பட்ட 10 வயது சிறுவன் காட்டாங்கொளத்தூரில் மீட்கப்பட்டான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல், வானகரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சந்துரு (வயது 10). 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளி செல்லும் முன் சந்துரு நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தனது மாமாவின் டீ கடைக்கு செல்வதாக கூறிச்சென்றான். அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி பல இடங்களில் மகனை தேடியும் கிடைக்காததால் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சுப்பிரமணியின் செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், உங்கள் மகன் காட்டாங்கொளத்தூரில் இருப்பதாக கூறினார். இதையடுத்து சுப்பிரமணி மற்றும் போலீசார் காட்டாங்கொளத்தூர் சென்று சந்துருவை மீட்டனர்.

அப்போது சிறுவன், “மாமா கடைக்கு சென்று விட்டு திரும்பிய போது காரில் வந்த 3 பேர் எனது முகத்தில் துணி வைத்தனர். இதில் மயங்கி விட்டேன். பின்னர் எழுந்து பார்த்த போது நான் மட்டும் காரில் இருந்தேன். என்னை காரில் கடத்தி வந்தவர்கள் டீ கடைக்கு சென்று இருந்தனர். அங்கிருந்து நான் தப்பி வந்து கல்லூரி மாணவர்களிடம் விவரத்தை கூறினேன். அவர்கள் எனது அப்பாவுக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்” என்றான்.

விசாரணைக்கு பிறகு சிறுவனை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் காரில் வந்தவர்கள் யார்? குழந்தைகளை கடத்தும் கும்பலா?, எதற்காக சிறுவனை கடத்தினார்கள்?, உண்மையிலேயே கடத்தப்பட்டானா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story