தினகரனுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு; எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஆதரிக்கப்போவதாக அறிவிப்பு


தினகரனுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு; எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஆதரிக்கப்போவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2017 6:00 AM IST (Updated: 6 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. (அம்மா) அணி நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் இடம் பெற்றுள்ள சில அமைச்சர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்த மோதல் போக்கினால் ஏற்படும் விளைவுகளை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தங்கள் அணியில் உள்ள காலியாக உள்ள பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் மற்றும் கூடுதல் நிர்வாகிகளை நேற்று முன்தினம் நியமித்தார்.

மொத்தம் 60 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகளில் 20 பேர் எம்.எல்.ஏ.க் கள், 12 பேர் முன்னாள் அமைச்சர்கள், ஒருவர் முன்னாள் எம்.பி., 5 பேர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், 3 பேர் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், ஒருவர் முன்னாள் மேயர், 2 பேர் முன்னாள் கவுன்சிலர்கள் ஆவார்கள்.

டி.டி.வி.தினகரனின் இந்த அறிவிப்புக்கு 4 எம்.எல்.ஏ.க் கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, அவர் வழங்கிய புதிய பதவியை ஏற்க முடியாது என்றும் கூறி இருக்கிறார்கள்.

மாநில மகளிர் அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்ட பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் அந்த பதவியை ஏற்க மறுத்ததோடு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து கட்சிப்பணியை தொடரப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

அவரை தொடர்ந்து நேற்று மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் வழங்கிய பதவியை ஏற்கப்போவது இல்லை என்று அறிவித்தனர்.

ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராக டி.டி.வி.தினகரனால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. பழனி அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

இதேபோல் விவசாய அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் அந்த பதவியை ஏற்க முடியாது என்று கூறி இருக்கிறார்.

பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கதிர்காமுவை மருத்துவ அணி இணைச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமித்து இருக்கிறார். அவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

டி.டி.வி.தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்தது அ.தி.மு.க.வினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த நடைமுறை இதுவரை பார்த்திராத ஒன்று என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இவர் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராக இருந்து வருகிறார்.

Next Story