விவசாயிகள் பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் 16–ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்


விவசாயிகள் பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் 16–ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Aug 2017 3:45 AM IST (Updated: 7 Aug 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சினைகளுக்காக 16–ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வரலாறு காணாத வறட்சியாலும், வங்கி கடன் தொல்லையாலும் இன்றைக்கு தமிழக விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்து விட்டது என்றால், ‘‘அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள்’’ என்று சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்தும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியிருக்கும் ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசின் விவசாயிகள் விரோத செயலைப் பார்த்து ஏழரைக் கோடி இதயங்கள் எரிமலை போல் குமுறி கொண்டிருக்கிறது.

தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் (பா.ஜ.க., அ.தி.மு.க. தவிர) மற்றும் விவசாய சங்கங்கள் விவசாயிகளின் இன்னல்களைப் போக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், பலமுனை போராட்டங்களை நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் காது கொடுத்து கேட்கவும் இல்லை. மாறாக அடக்குமுறைகளை விவசாயிகள் மீது மட்டுமல்ல அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீதும் கட்டவிழ்த்துவிட்டு, ஒரு சர்வாதிகார மனப்பான்மையில் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு இயங்கி வருகிறது.

இந்த விவசாயிகள் விரோத நடவடிக்கைகளுக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க.,வும் துணை நிற்பது வேதனையளிக்கிறது.

இந்நிலையில் ‘இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின்’ சார்பில் விவசாயிகளின் முழுக் கடன்களையும் தள்ளுபடி செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் கொள்முதல் விலை வழங்குவது, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள முழு தொகையையும் வழங்குவது, காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகிற 16–ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

விவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் மாவட்ட தலைநகரங்களில் தவறாமல் பங்கேற்று, ஒட்டுமொத்த தமிழகமும் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நிற்கிறது என்ற உணர்வை மத்திய, மாநில அரசுகளுக்கு வெளிப்படுத்துமாறு அனைத்து தி.மு.க. மாவட்ட செயலாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. அரசுக்கும், மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசுக்கும் ‘‘விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு தேவை’’ என்ற தீர்க்கமான செய்தியை கொண்டு போய் சேர்த்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்வத்துடன் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story