ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை


ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 7 Aug 2017 10:07 PM IST)
t-max-icont-min-icon

ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

வருகிற 25–ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் நா.சுந்தரகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், வர உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அதன்படி பொதுமக்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் வருமாறு:–

* களி மண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாதது மற்றும் எந்த வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்த விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

* நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களை உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்கவேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது.

* மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாடவேண்டும். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ஆகியோரை அணுகி மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story