புதுக்கோட்டை மீனவர்கள் 53 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை


புதுக்கோட்டை மீனவர்கள் 53 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 8 Aug 2017 11:21 AM IST (Updated: 8 Aug 2017 12:16 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மீனவர்கள் 53 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்துச் சென்றனர்.

புதுக்கோட்டை  மாவட்டம் கோட்டைப்பட்டினம்,   ஜெகதாப்பட்டினம்   பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்  1000-க்கும் மேற்பட்ட   மீனவர்கள்  கடலுக்கு சென்றனர். அவர்கள் வழக்கமாக  மீன்பிடிக்கும் இந்திய  கடல்  எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.

நள்ளிரவில்  அங்கு இலங்கை   கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது.  அதிலிருந்த  கடற்படை வீரர்கள்  கோட்டைப்பட்டினத்தை  சேர்ந்த   
மீனவர்களின் 2 படகுகளில் தாவிக்குதித்தனர்.   பின்னர் அந்த   படகுகள்   முழுவதும் சோதனை  நடத்திய  அவர்கள்  அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனால்  நிம்மதி பெரு மூச்சுவிட்டவாறு மீனவர்கள் தொடர்ந்து  அங்கு  மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். சுமார் 2 மணி நேரம் கழித்து  மீண்டும்  அந்த  பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர்  அந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த  10-க்கும்  மேற்பட்ட படகுகளை  சுற்றி  வளைத்தனர்.

 துப்பாக்கிகளை கொண்டும்  மிரட்டினர். மேலும் தங்கள்  கடற்படை ரோந்து கப்பலில் வந்த வீரர் ஒருவரை காணவில்லை. அவரை மீனவர்கள் தான் பிடித்து வைத்திருப்பதாக கூறினர்.  உடனடியாக அவரை விடுவிக்காவிட்டால் நிலைமை  மோசமாகிவிடும் என்றும் எச்சரித்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு   உருவானது.  வீரர் மாயமானது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது  என்று  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த இலங்கை கடற்படையினர் 13 படகுகளில் இருந்த சுமார் 44 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.  இதற்கிடையே கடற்படையினருக்கும், புதுக்கோட்டை மீனவர்களுக்கும் இடையே கடும்வாக்கு வாதம் ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழலும் உருவானது.

நடுக்கடலில் செய்வதறியாது திகைத்த புதுக்கோட்டை மீனவர்களை  கடற்படையினர் துப்பாக்கி முனையில் இலங்கையில் உள்ள   காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவலை புதுக்கோட்டை மீனவர்கள் தங்களது வாக்கிடாக்கி மூலம் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே  நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தை  சேர்ந்த மீனவர்கள்  9 பேரையும்   சிறைப்பிடித்த கடற்படையினர் அவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட  வலைகளை பயன்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்தனர்.  

Next Story