சென்னையில் பலத்த காற்றுடன் மழை போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


சென்னையில் பலத்த காற்றுடன் மழை போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 11 Aug 2017 11:00 PM GMT (Updated: 11 Aug 2017 7:00 PM GMT)

சென்னையில் மாலை பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சென்னை, 

சென்னையில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

சென்னையில் நேற்று மாலை எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அமைந்தகரை, அண்ணாநகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம், புழல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதிகளில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் கோயம்பேடு வந்தனர். ஏற்கனவே உள்ள பஸ்களை விடவும் நேற்று சிறப்பு பஸ்களும் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டது. இதனுடன் சேர்ந்து மழையும் பெய்ததால் அப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து கொண்டே சென்றன.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை, வடபழனி ஆற்காடு சாலை, தியாகராயநகர் உஸ்மான் சாலை, கிண்டி சர்தார் பட்டேல் ரோடு உள்பட நகரின் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர். மோட்டார்சைக்கிளில் செல்வோர் மழையில் நனைந்தபடியே சென்றனர். மின்சார ரெயில்களும் மிதமான வேகத்திலேயே இயக்கப்பட்டன.

மெரினா கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே கடற்கரை மணலில் இருந்து ஓட்டமும் நடையுமாய் சாலைக்கு திரும்பினர். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7.30 மணி வரை நீடித்தது. பல இடங்களில் தொடர்ந்து தூறல் பெய்துகொண்டே இருந்தது.

கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்று பெய்த மழையால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 

Next Story