நமது எம்ஜிஆர் பத்திரிகையில் பா.ஜனதா மீது தினகரன் அணி மீண்டும் பாய்ச்சல்


நமது எம்ஜிஆர் பத்திரிகையில் பா.ஜனதா மீது தினகரன் அணி மீண்டும் பாய்ச்சல்
x
தினத்தந்தி 12 Aug 2017 11:31 AM IST (Updated: 12 Aug 2017 11:31 AM IST)
t-max-icont-min-icon

நமது எம்ஜிஆர் பத்திரிகையில் கவிதை நடையில் பா.ஜனதா மீது தினகரன் அணி மீண்டும் பாய்ந்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவுகளை தொடர்ந்து நடந்து வரும் இணைப்பு முயற்சிகளுக்கு பா.ஜனதா பக்க பலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 இது குறித்து  அ.தி.மு.க நமது எம்.ஜி ஆர் பத்திரிகையில் கவிதை  நடையில் எழுதபட்டு இருப்பதாவது:--

உத்தரகாண்ட்டில்
ருத்ர தாண்டவமாடி,

அருணாசலபிரதேசத்தில்
அத்துமீறி அடாவடிகள்
நடத்தி,

கோவாவில்
காங்கிரசின் குடி கெடுத்து

பீகாரில்
லாலு-நித்தீசை பிரித்து

பின்வழியே
அதிகார பீடத்தைப்பிடித்து,

அரவிந்த் கெஜ்ரிவாலின்
அதிகாரச்செங்கோலை
முடக்கி,

புதுச்சேரி
நாராயணசாமிக்கு
புதுசு புதுசா
தொல்லைகளை அடுக்கி,

மணிப்பூரில்
மக்கள் தீர்ப்புக்கு எதிராக
மகுடத்தைப் பறித்து,

ஆளுநர்களை
அரசியல்
ஏஜெண்டுகளாக்கி

அக்கிரமங்கள் நடத்தி,

நீதித்துறை,
அரசியல் சாசனம்,

அமலாக்கப் பிரிவு,
வருமான வரி,

தேர்தல் ஆணையம்
சி.பி.ஐ., எனும்

தன்னாட்சி அமைப்புகளை
தலைகுனிய வைத்து,

அரசியல் அரிப்புக்கு
அவற்றை
சொறிகின்ற ஆயுதமாக்கி,

ஜனநாயகப்
படுகொலைகளை
சகஜங்களாக்கி,

சர்வாதிகார
பகல் கொள்ளையை
சாதனையென பீற்றி,

எழுபதாண்டு கால
இந்தியத்தின்
அரசியல் பண்பாட்டுக்கு
இழிவுகளைச் சேர்த்து

அப்பழுக்கற்ற
பாரதத்தின்
பன்முகத்தன்மையை
ஆழக்குழிதோண்டி
புதைத்து,

உச்சநீதிமன்றத்துக்கும்
அதிகாரம் இல்லையென

உக்கிரமான
அக்கிரமத்தை நிகழ்த்திய
இந்த உத்தமர்கள்தான்...

ஆண்டுக்கு
2.5 கோடி பேருக்கு
வேலை என
ஆசை வலை வீசியவர்கள்...

ஆளுக்கு 15 லட்சம்
ரொக்கம் என
வாய்ஜாலம் பேசியவர்கள்...

அலைமீது
வலைகொண்டு
வாழும் மீனவர்க்கு
அமைச்சகமென
அள்ளி வீசியவர்கள்...

அமெரிக்க
டாலர் மதிப்பை
35 ரூபாய்க்குள்
அடக்குவோம்,

பெட்ரோல்&டீசல்
விலையை
பாதியாகக் குறைப்போம்...
என்றெல்லாம்

வகை வகையான
வாயாலே
வடை சுட்டவர்கள்...

வாய்மையால்
விடை சொல்ல
வழியற்றவர்கள்...

விளைநிலங்களை
வெடிகுண்டு
கிட்டங்கிகளாக்கி

விவசாயி வயிற்றில்
அடிப்பவர்கள்...

வாக்களித்த மக்களை
‘வரி’ குதிரை
ஆக்கியவர்கள்...

கரன்சியை வெற்று
காகிதமாக்கி

‘கருப்பு பணம்
ஒழித்தோம்’ என
கதையளப்பவர்கள்...

இவர்கள் முன்னின்று
நடத்தியதெல்லாம்

மோசடிகளும்
கூடவே

மோடியா? இந்த
லேடியா? என

சவால் விட்ட இயக்கத்தை
மூன்றாகப் பிளந்ததும்

ஈரிலையை முடக்கி
இன்னல்கள்
தந்ததும்தானே!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story