நூல் கொள்முதல் செய்வதற்கு கைத்தறித்துறை வெளியிட்ட அறிவிப்பு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு


நூல் கொள்முதல் செய்வதற்கு கைத்தறித்துறை வெளியிட்ட அறிவிப்பு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Aug 2017 9:30 PM GMT (Updated: 12 Aug 2017 7:04 PM GMT)

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக கைத்தறித்துறை வெளியிட்ட நூல் கொள்முதல் ஒப்பந்த அறிவிப்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

சென்னை, 

தமிழக கைத்தறித்துறை இணை இயக்குனர், 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்காக, பாலியஸ்டர் நூல் கொள்முதல் ஒப்பந்த அறிவிப்பை கடந்த ஜூன் 22-ந்தேதி வெளியிட்டார். இந்த ஒப்பந்தபுள்ளி அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தனியார் நூல் நிறுவனம் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, நூல் கொள்முதல் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த ஒப்பந்த அறிவிப்பு, தமிழகத்தில் வெளியாகும் பத்திரிகைகளில் மட்டும் விளம்பரமாக வெளியாகியுள்ளது. தமிழ்நாடு வெளிப்படைத்தன்மையான ஒப்பந்த பணி விதி 11-ன்படி, ரூ.50 கோடிக்குமேல் ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும்போது, அதுகுறித்த விளம்பரத்தை மாநிலங்களில் வெளியாகும் பத்திரிகைகளிலும், இந்திய வணிக இதழிலும் விளம்பரம் செய்யவேண்டும் என்று கூறுகிறது. இதுதொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு நிதித்துறையும் ஒரு அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி ரூ.50 கோடிக்கு மேல் ‘பாலியஸ்டர்’ நூல் கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்த விவரங்களை, இந்திய வணிக இதழிலும் தமிழக அரசு விளம்பரம் செய்திருக்க வேண்டும். ஆனால், அரசு அவ்வாறு செய்யவில்லை.

மேலும், அந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பவர்கள் ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கவேண்டும் என்றும் விதி கூறுகிறது. ஆனால், நூல் கொள்முதல் தொடர்பான அறிவிப்பை, ஜூன் 22-ந்தேதி வெளியிட்ட தமிழக அரசு, ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்ய ஜூலை 7-ந்தேதி கடைசி நாள் என்று அறிவித்து 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கி இருக்கிறது. இதுவும், தமிழ்நாடு வெளிப்படைத்தன்மையான ஒப்பந்த பணி விதிகளுக்கு எதிராக உள்ளன.

இவ்வாறு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்குவதற்கு கைத்தறித்துறை இயக்குனரும் அனுமதி ஒப்புதல் அளித்து இருக்கிறார். 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கவேண்டும் என்று ஒப்பந்த விதிகள் கூறும்போது, அதை குறைக்கவேண்டும் என்றால், அதற்கு தகுந்த காரணத்தை தமிழக அரசு கூறவேண்டும். இந்த வழக்கில், அப்படி ஒரு தெளிவான காரணத்தை கைத்தறித்துறை இயக் குனர் தெரிவிக்கவில்லை.

எனவே, இந்த வழக்கின் தன்மைக்குள் போகவிரும்பவில்லை. தமிழ்நாடு வெளிப்படைத்தன்மையான ஒப்பந்த பணி விதிகளை பின்பற்றி, நூல் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பதால், கடந்த ஜூன் 22-ந்தேதி நூல் கொள்முதல் தொடர்பான ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்கிறேன்.

கைத்தறித்துறை இணை இயக்குனர், அனைத்து விதிகளை பின்பற்றி, நூல் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிடவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story