ரேஷன் கடைகளில் பருப்பு-பாமாயில் தட்டுப்பாடு
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு- பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு- பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை ஒரு வாரத்தில் சீர்செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 34 ஆயிரத்து 775 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தமிழக அரசு பொதுவினியோக திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, மைதா, பாமாயில் மற்றும் மண்எண்ணெய் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்க்கரை (கிலோவில்) ரூ.13.50-க்கும், கோதுமை - ரூ.7.50-க்கும், துவரம்-உளுந்தம் பருப்பு ரூ.30-க்கும், பாமாயில் - ரூ.25-க்கும், மண்எண்ணெய் (ஒரு லிட்டர்) - ரூ.14.20 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்மூலம் 1.97 கோடி ரேஷன் கார்டுகளில் உள்ளடங்கிய 6 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரத்து 614 பேர் பயன் அடைகின்றனர். வெளிச்சந்தையை விட மிகக்குறைந்த விலையில் பருப்பு மற்றும் பாமாயில் விற்பனை செய்யப்படுவதால், ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
பொதுவாகவே மாதம் முதல் வாரத்திலேயே ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு விடும். ஆனால் இம்மாதம் தொடங்கி 2 வாரம் கடந்தும், பருப்பு வகைகளும், பாமாயிலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டும் முறையான பதில் கிடைக்கவில்லை என்று உணவுப் பொருள் வழங்கல் துறைக்கு தொடர்ந்து மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இனி பருப்பு வகைகளும், பாமாயிலும் கிடைக்காதோ? என்ற அச்சமும் மக்களிடையே நிலவி வருகிறது.
இன்னும் ஒரு வாரத்துக்குள் இப்பிரச்சினை சீர்செய்யப்படும் என்று அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து அத்துறை சார்ந்த அதிகாரிகள் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும் பாமாயில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை, பொது வினியோக திட்டத்துக்கு வினியோகிப்பவர்களால் சுத்திகரிக்கப்பட்டு, தேவையான வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் ‘பி’ ஆகியவை சேர்க்கப்படுகிறது. இப்படி இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மீதான டெண்டர் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, வினியோகம் செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல பொது வினியோக திட்டத்துக்கு மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நேற்று உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, டெண்டருக்கான ஒப்பந்தப்புள்ளி உடனடியாக இறுதி செய்யப்பட்டு தடையின்றி பொதுமக்களுக்கு வினியோகிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் வழக்கம்போல் ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு வகைகள் தடையின்றி வினியோகிக்கப்படும்.
அதேநேரம் ரேஷன் கடைகளில் போதுமான அரிசி கையிருப்பில் உள்ளது. கூடுதலாக ஒதுக்கீடு பெற இந்திய உணவு கழகத்துக்கு, தமிழக அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story