அ.தி.மு.க.வின் 3 அணிகளையும் இணைத்து வலுவான குதிரை மீது சவாரி செய்ய பா.ஜ.க. திட்டமிடுகிறது
‘‘அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் 3 அணிகளையும் இணைத்து, வலுவான குதிரை மீது சவாரி செய்ய பா.ஜ.க. திட்டமிடுகிறது’’, என்று சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை,
இதில் மாநில தேர்தல் அதிகாரிகள் கே.பாபிராஜூ, சஞ்சய்தத், துணை தேர்தல் அதிகாரிகள் சத்யன்புத்தூர், முருகன் முனிரத்தினம், விஜய் வர்மா, அனீஷ் அகமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன் உள்பட அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுடன் திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் அமைப்பு தேர்தலுக்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சு.திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–கேள்வி:– சசிகலா தலைமையில் இருப்பது தான் அ.தி.மு.க.வின் உண்மையான அணி என்று சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறாரே?
பதில்:– அது அவரது கருத்து. அ.தி.மு.க.வின் தலைமை யார்? என்பது என் பிரச்சினை அல்ல. நான் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர். அணிகளாக பிரிந்திருக்க வேண்டாம் என்று என்னால் யோசனை தான் சொல்லமுடியும். மற்றபடி அக்கட்சிக்கு யார் தலைமை? என்பதில் எனக்கு அக்கறை இல்லை.
ஆனால் அ.தி.மு.க. எனும் கட்சியை பா.ஜ.க. உடைத்துவிட்டது. பா.ஜ.க. மூலமாக அ.தி.மு.க. பலியாகிவிட்டதே என்று வருத்தப்படுகிறேன். அக்கட்சியையும், கட்சி சின்னத்தையும் பா.ஜ.க. முடக்கிவிட்டது. அ.தி.மு.க.வால் எதையுமே செய்யமுடியவில்லை. மக்களுக்காக அவர்கள் டெல்லி செல்லவில்லை.
இவர்களை டெல்லிக்கு பா.ஜ.க. கட்ட பஞ்சாயத்துக்காகவே கூப்பிடுகிறது. அங்கே அணிகள் இணைப்புக்கான முயற்சி தான் நடக்கிறது. அ.தி.மு.க.வின் 3 அணிகளையும் இணைத்து அதில் வலுவான குதிரை மீது சவாரி செய்யலாம் என்று பா.ஜ.க. திட்டம் போடுகிறது.
கேள்வி:– ‘நீட்’ தேர்வு தேவையானது. ‘நீட்’ இல்லை என்றால் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறாரே?
பதில்:– கருத்து சொல்ல அனைவருக்குமே உரிமை உண்டு. ‘நீட்’ தேர்வில் விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து. மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஹசன் ஆரூண் உள்பட நிர்வாகிகள்–தொண்டர்கள் பங்கேற்றனர்.