அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம்


அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம்
x
தினத்தந்தி 13 Aug 2017 11:15 PM GMT (Updated: 13 Aug 2017 9:13 PM GMT)

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, அத்திக்கடவில் இருந்து குன்னத்தூர் வரை டாக்டர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

சென்னை,

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அத்திக்கடவில் இருந்து நேற்று மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

இந்த விழிப்புணர்வு பயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் தெய்வசிகாமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பயணம் அன்னூர், அவினாசி வழியாக சென்று குன்னத்தூரில் முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து மாலை பெருந்துறையில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற டாக்டர் அன்புமணி ராமதாஸ் இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பயன்கள் என்னென்ன? என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார்.

முன்னதாக விழிப்புணர்வு பயணத்தின்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:–

அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். 1.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 50 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேறும். 700–க்கும் மேற்பட்ட நீர்தேக்கும் நிலைகள் பயன்பெறும்.

இது கொங்கு மக்களின் 50 ஆண்டு கனவாகும். 2016–ம் ஆண்டும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். எனவே இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காமராஜர் காலத்தில் திட்டமிட்டபடியே இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story