சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா: பா.ஜ.க.வின் பிடியில் இருந்து தமிழக அரசு விடுதலை பெற வேண்டும்


சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா:  பா.ஜ.க.வின் பிடியில் இருந்து தமிழக அரசு விடுதலை பெற வேண்டும்
x
தினத்தந்தி 15 Aug 2017 9:45 PM GMT (Updated: 15 Aug 2017 1:50 PM GMT)

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சுதந்திர தின விழாவில், ‘‘பா.ஜ.க.வின் பிடியில் இருந்து தமிழக அரசு விடுதலை பெற வேண்டும்’’, என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தலைமை வகித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், அலுவலக வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் காங்கிரஸ் சேவாதள பிரிவு சார்பில் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை, கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், முன்னாள் செயலாளர் கஜநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சு.திருநாவுக்கரசர் இனிப்பு வழங்கினார்.

பின்னர் சு.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தை கொண்டாடும் வேளையில், சுதந்திரத்துக்கு ரத்தம் சிந்தி போராடிய தியாகிகளை நினைவுகூற வேண்டும். வலுவான, வளமையான இந்தியாவை உருவாக்க சபதம் ஏற்கவேண்டும். காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், நேரு, காமராஜர் போன்ற தலைவர்கள் வழியில் நம் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– சுதந்திர தினத்தையொட்டி அரசுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன?

பதில்:– மத்திய அரசிடம் அடிமைப்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு விரைவில் விடுதலையாகி, சுதந்திரம் பெற வேண்டும். பா.ஜ.க.வின் பிடியில் இருந்து தமிழக அரசும், மக்களும் காப்பாற்றப்பட்டு, விடுதலை பெற வேண்டும்.

கேள்வி:– தமிழக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறதா?

பதில்:– ஆட்சி செய்வதற்கு அவர்களுக்கு நேரமே இல்லையே... பிளவுபட்டு இருக்கும் அக்கட்சிக்கு, அணிகளை ஒன்றுசேர்க்கவே நேரம் போதவில்லை. அணிகள் இணைப்புக்கான கட்ட பஞ்சாயத்து டெல்லியில் நடப்பதால், அங்கே சென்றுகொண்டு இருக்கிறார்கள். மீதமுள்ள ஆட்சி காலம் பறிபோய்விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.  மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.


Next Story