அமைந்தகரையில் அதிகாலை சம்பவம்: பூ வியாபாரி வீட்டில் ‘திடீர்’ தீ விபத்து


அமைந்தகரையில் அதிகாலை சம்பவம்: பூ வியாபாரி வீட்டில் ‘திடீர்’ தீ விபத்து
x
தினத்தந்தி 17 Aug 2017 4:15 AM IST (Updated: 17 Aug 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அமைந்தகரையில் பூ வியாபாரி வீட்டில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

‘கியாஸ்’ சிலிண்டர் வெடித்ததால் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது.

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் பூ வியாபாரி வாசு (வயது 45). முத்து மாரியம்மன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2–வது தளத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. மகன் அய்யனார் தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி லலிதா. கடந்த சில நாட்களாக வாசுவின் தங்கை கஸ்தூரியும் வாசு வீட்டிலேயே தங்கி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புழுக்கம் தாங்காமல், வீட்டின் வரவேற்பறையிலேயே அனைவரும் தூங்கினர். அதிகாலை வீட்டின் உள் அறையில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது. இதனால் அனைவரும் மூச்சுத்திணறலுடன் திடுக்கிட்டு எழுந்தனர். புகை வந்த திசையை நோக்கி சென்று பார்த்தனர். அங்குள்ள அறையில் இருந்த கட்டில், மெத்தை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனைவரும் தண்ணீரை ஊற்றி, தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அருகில் இருந்த சமையல் அறைக்கு தீ பரவியது. சமையல் அறைக்குள் தீப்பற்றியதும், அனைவரும் சுதாரித்து வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது சமையல் அறையில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களில் ஒரு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், கோயம்பேட்டில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் மூலம் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வீடு முழுவதும் பற்றி எரிந்த தீயை, சுமார் 20 நிமிடங்கள் போராடி அணைத்தனர். இந்த சம்பவத்துக்கு உள் அறையில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.

தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், வாசு குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, மர சாமான்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகி இருந்தன. வீட்டில் இருந்த பீரோவும் கரிக்கட்டையாக காட்சி அளித்தது.

பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் தீயில் சிக்கி உருகிவிட்டது. மேலும் பட்டுச்சேலைகள், ரூ.1.75 லட்சம் ரொக்கப்பணம் போன்றவை தீயில் எரிந்து சாம்பலானது. இதனால் வாசு குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் குடியிருப்பு கட்டிடத்தின் 2–வது தளத்தில் ஏராளமான விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. தீ விபத்து நடந்த வீடும், கடும் சேதம் அடைந்துள்ளது.

வரவேற்பு அறையில் அனைவரும் படுத்திருந்ததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டு, அவர்கள் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.


Next Story