பெருங்குடி–கொடுங்கையூரில் குப்பை எரி உலைகள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
பெருங்குடி–கொடுங்கையூரில் குப்பை எரி உலைகள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் குப்பையை எரித்து மின்சாரம் எடுக்கும் எரி உலையை அமைக்கவும், சென்னை மாநகராட்சியின் 70 சதவீத குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெருங்குடியில் 26 மெகாவாட் எரி உலை, கொடுங்கையூரில் 32 மெகாவாட் எரிஉலை ஆகியவை ரூ.1,300 கோடியில் அமைக்கப்பட இருக்கிறது. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 5000 டன் குப்பையை எரிக்க திட்டமிட்டுள்ளனர்.
குப்பை எரிக்கும் எரி உலைகள் மிக மோசமான கேடுகளை ஏற்படுத்தக் கூடியவை. பெரும் ஊழலையும், சுற்றுச்சூழல் பேரழிவையும், கடும் உடல்நல கேடுகளையும் ஏற்படுத்த கூடிய இந்த பேராபத்து திட்டம் கைவிடப்பட வேண்டும்.
ஐரோப்பிய தொழில் நுட்பத்தையும் விதிமுறையையும் கடைபிடிப்போம் என்று கூறினாலும், உண்மையில் சீனாவில் இருந்து மோசமான தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்யவுள்ளனர். இந்த மோசமான தொழில்நுட்பத்தையும் தனியார்மயத்தையும் உலக வங்கி சென்னை மக்களின் மீது திணிக்கிறது.
எனவே, சென்னை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் குப்பை எரி உலைகள் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.