தொண்டர்கள் இருக்கும் வரை யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம்
தொண்டர்கள் இருக்கும் வரை யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று கடலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று மதியம் 2 மணிக்கு கடலூர் வந்தார். வரும் வழியில் கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு கடலூர் மஞ்சக்குப்பம் சுற்றுலா மாளிகையில் தங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 4 மணி அளவில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் விழா மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஓவிய கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
பின்னர் விழா மேடைக்கு வந்த அவர், அங்கு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், பாண்டியன், கலைச்செல்வன், சத்யா பன்னீர்செல்வம் மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 41 ஆயிரத்து 608 பயனாளிகளுக்கு ரூ.212 கோடியே 63 லட்சத்து 22 ஆயிரத்து 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் கடலூரில் இருந்து தான் தொடங்கியது. 1982-ம் ஆண்டு கடலூரில் நடந்த மாநாட்டில் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவரை கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார்.
லட்சக்கணக்கான தொண்டர்களை தனி ஒருவராக தனது தோளில் சுமந்த எம்.ஜி.ஆர். கழக பொறுப்புகளை இந்த மண்ணில் தான் ஜெயலலிதாவுக்கு பகிர்ந்தளித்தார். எனவே கழகத்தின் வரலாற்றில் கடலூர் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. கழக சரித்திரத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஊர் இந்த ஊர்.
இங்குள்ள இளைஞர்கள், பெண்கள் வீரமும், விசுவாசமும் மிக்கவர்கள் என்பதை அறிவேன். இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் ஒவ்வொரு தருணத்திலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரையில் வீரமும், விவேகமும் கொண்ட இளைஞர்களை எம்.ஜி.ஆரின் பிம்பங்களாக பார்க்கிறேன். ஒரு இளைஞர் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
இந்த ஆட்சி இருக்குமா? இருக்காதா? எத்தனை நாளைக்கு இருக்கும் என்று சில பேர் சொல்லி வருகிறார்கள். சிலர் மக்களை பற்றி கவலைப்படாமல், ஆட்சிக்கு வர வேண்டும் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் பணி செய்கிறவர்கள் தான் அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வழியில் வந்த தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும், அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம். மிரட்டலை துணிந்து எதிர்கொள்வோம். அதை முறியடிக்கிற சக்தி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உண்டு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.