நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவையற்றது; எங்கள் தர்ம யுத்தத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தரவேண்டும்


நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவையற்றது; எங்கள் தர்ம யுத்தத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தரவேண்டும்
x
தினத்தந்தி 16 Aug 2017 10:15 PM GMT (Updated: 16 Aug 2017 9:47 PM GMT)

நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவையற்றது என்றும், எங்கள் தர்ம யுத்தத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தரவேண்டும் எனவும் க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அணிகள் இணைப்பு, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– அணிகள் இணைப்புக்கான நேரம் நெருங்கிவிட்டது என்று அ.தி.மு.க. (அம்மா) அணி நிர்வாகிகள் கூறி உள்ளனரே?

பதில்:– சசிகலா குடும்பத்தினரை முழுமையாக கட்சியில் இருந்து ஒதுக்குவது, ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலர வைப்பது எனும் 3 குறிக்கோள் எங்கள் தர்மயுத்தத்தில் உள்ளடங்கி உள்ளது. இதில், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்ததை வரவேற்கிறோம். ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை என்பதை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இது நடக்கும் பட்சத்தில் தர்ம யுத்தத்தின் 2–வது முக்கிய குறிக்கோள் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.

கேள்வி:– தமிழக அரசையும், முதல்–அமைச்சரையும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே?

பதில்:– தமிழக மக்கள் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பது தான் கமல்ஹாசன் எண்ணம் என்றால், எங்கள் தர்ம யுத்தத்துக்கு ஆதரவு தரவேண்டும். இதுகுறித்து கருத்து சொல்லவேண்டும். அப்படி செய்தால் தான் தமிழ் சமுதாயத்தை அவர் முழுமையாக பார்ப்பதாக அர்த்தம். அதைவிடுத்து பொதுவாக ஊழல் ஒழியவேண்டும் என்று கூறிவருவது சரியானது அல்ல.

கேள்வி:– சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா?

பதில்:– இரு அணிகளும் பிரிந்த சமயத்தில் சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி தேர்தல் வந்தால் மக்கள் குழப்பம் அடைவார்கள். இரு அணிகளும் இணைவதில் இணக்கமான சூழல் உள்ளதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவையற்றது. நாங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவரப்போவது இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story