முதலமைச்சர் விழாவில் கிராம உதவியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு கோஷம்


முதலமைச்சர்  விழாவில் கிராம உதவியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு கோஷம்
x
தினத்தந்தி 17 Aug 2017 8:33 AM GMT (Updated: 17 Aug 2017 8:33 AM GMT)

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கிராம உதவியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். கிராம நிர்வாக அதிகாரி சம்பள உயர்வை அறிவித்தார். பேசி முடித்ததும் சங்க நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

அப்போது கிராம உதவியாளர் சங்கத்தினர்  எழுந்து திடீரென கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்பட வில்லை. நாங்கள் சம்பள உயர்வு என்கிற ஒரே ஒரு கோரிக்கை தான் வைத்தோம். ஆனால் எங்களுக்கு முதல்-அமைச்சர் எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.

இதனால் அரங்கில் பரபரப்பு நிலவி யது. கோஷம் எழுப்பிய வர்கள் மேடையை நோக்கி முன்னேறினார்கள். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சமாதானப்படுத்தினார். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை.

இதனால் உதயகுமார் கீழே இறங்கி சென்று சமாதானப்படுத்தினார். உங்கள் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. முதல்-அமைச்சர் அதை பரிசீலித்து நல்ல முடிவை அறிவிப்பார். இப்போது சத்தம் போடாதீர்கள். விழாவில் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. கண்டிப்பாக  உங்கள் கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றும் என்றார்.  இந்த பரபரப்புக்கு மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேடையில் இருந்து இறங்கி தலைமை செயலகம் சென்று விட்டார்.


Next Story