வடமாநிலங்களில் கடும் மழையால் பருப்பு வகைகள் விலை உயர்வு


வடமாநிலங்களில் கடும் மழையால் பருப்பு வகைகள் விலை உயர்வு
x
தினத்தந்தி 17 Aug 2017 10:15 PM GMT (Updated: 17 Aug 2017 1:48 PM GMT)

வடமாநிலங்களில் கடும் மழையால் பருப்பு வகைகள் விலை உயர்ந்து வருகிறது.

சென்னை,

புதிய நெல் வரத்தால் அரிசி விலை குறைந்துள்ளது.  இந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நெல் விளைச்சல் அமோகமாக நடந்துள்ளது. இதனால், அங்கிருந்து தினமும் 300 லாரிகளில் தமிழகத்திற்கு நெல் வரத்து உள்ளது. அதேபோல், தமிழகத்தில் கோவை, காங்கேயம், ஈரோடு, திருவண்ணாமலை, ஆரணி, கருங்குழி, செங்கல்பட்டு, இலவம்பேடு, பொன்னேரி ஆகிய இடங்களிலும் நெல் அறுவடை நடந்துள்ளது.

இதனால், சந்தைக்கு புதிய அரிசி வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, அரிசி வகைகள் விலையும் சற்று குறைந்துள்ளது. கடந்த மாதம் 25 கிலோ எடை கொண்ட ‘நம்பர்’ அரிசி மூட்டை ரூ.850–க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, அது ரூ.800 ஆக குறைந்துள்ளது. அதேபோல், ஐ.ஆர்.–50 ரூ.900–ல் இருந்து ரூ.850 ஆகவும், ரூபாளி பொன்னி ரூ.950–ல் இருந்து ரூ.900 ஆகவும், அதிசய பொன்னி ரூ.1000–ல் இருந்து ரூ.950 ஆகவும், டீலக்ஸ் பொன்னி ரூ.1100–ல் இருந்து ரூ.1050 ஆகவும், பாபட்லா பொன்னி முதல் ரகம் ரூ.1200–ல் இருந்து ரூ.1150 ஆகவும், 2–வது ரகம் ரூ.1100–ல் இருந்து ரூ.1050 ஆகவும் விலை சரிந்துள்ளது.

இவ்வாறு அரிசி விலை குறைந்து வரும் அதே வேளையில், பருப்பு வகைகள், பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள் வருகின்றன.

தற்போது, வடமாநிலங்களில் அதிக அளவு மழை பெய்து வருவதால், பருப்பு விளைச்சல் குறைந்துள்ளது. வரத்து குறைவால் பருப்பு வகைகள் விலையும் அதிகரித்து வருகின்றன.

உளுந்தம் பருப்பு (முதல் ரகம்) ஒரு கிலோ ரூ.75–ல் இருந்து ரூ.85 ஆகவும், 2–வது ரக உளுந்தம் பருப்பு ரூ.65–ல் இருந்து ரூ.75 ஆகவும், பாசிப் பருப்பு (முதல் ரகம்) ஒரு கிலோ ரூ.65–ல் இருந்து ரூ.75 ஆகவும், 2–வது ரக பாசிப் பருப்பு ரூ.55–ல் இருந்து ரூ.65 ஆகவும், கடலைப் பருப்பு ஒரு கிலோ ரூ.65–ல் இருந்து ரூ.75 ஆகவும் விலை கூடியுள்ளது.

இந்தியாவுக்கு இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல், சன்பிளவர் ஆயில் தென்அமெரிக்கா, ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது மத்திய அரசு இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் ரூ.55–க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாமாயில் தற்போது ரூ.60 ஆகவும், சன்பிளவர் ஆயில் முதல் ரகம் ரூ.78–ல் இருந்து ரூ.82 ஆகவும், 2–வது ரகம் ரூ.68–ல் இருந்து ரூ.72 ஆகவும் விலை கூடியுள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அக்மார்க் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவை கடந்த மாத விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story