சேவை செய்யும் கல்வி அறக்கட்டளைக்கு அரசிடம் கட்டண சலுகை பெற உரிமை உண்டு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சேவை செய்யும் அறக்கட்டளைக்கு அரசிடம் கட்டண சலுகை பெற உரிமை உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை
மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளி
சென்னை நொளம்பூரில் உள்ள நேத்ரோதயா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோவிந்தகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எங்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிக் காக, அரசுக்கு சொந்தமான நிலம் 30 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு கட்டிடம் கட்ட உரிய அனுமதி பெற்றுள்ளோம். உட்கட்டமைப்பு வசதிக்கான கட்டணம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எங்களுக்கு கடிதம் அனுப்பியது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சேவை அடிப்படையில் அறக்கட்டளை நடத்தி வருவதால் கட்டண விலக்கு அளிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உட்கட்டமைப்பு வசதிக்கான கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
உரிமை உள்ளது
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் விசாரித்தனர். முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்காக சேவை செய்யும் கல்வி அறக்கட்டளைக்கு உட்கட்டமைப்பு வசதிக்கான கட்டண சலுகை பெற உரிமை உள்ளது. கட்டண விலக்கு கோரும் மனுதாரரின் மனுவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர் 3 மாதத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இதுபோன்ற அமைப்புகள் கட்டண விலக்கு கோரும்போது உரிய காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு நகர ஊரமைப்பு சட்டப்பிரிவில் உரிய திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story