மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்


மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2017 5:30 AM IST (Updated: 4 Sept 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், கலந்துகொள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை

அனைத்துக் கட்சி கூட்டம்

‘நீட்’ தேர்வால் டாக்டர் கனவு தகர்ந்த வேதனையில், தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், ரூ.10 லட்சம் நிதியும் வழங்கினார்.

பின்னர் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், “திங்கட்கிழமை (இன்று) எனது தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அடுத்தகட்டமாக இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

கட்சி தலைவர்களுக்கு அழைப்பு
அதன் அடிப்படையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய 3 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.


Next Story