ஆசிரியர்களுக்கு எந்த விடுமுறையும் கொடுக்கவேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு


ஆசிரியர்களுக்கு எந்த விடுமுறையும் கொடுக்கவேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Sept 2017 4:45 AM IST (Updated: 11 Sept 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கு எந்த வித விடுமுறைகளும் கொடுக்கவேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை ஏற்பட்டதால் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள பல சங்கங்கள் போராட்டத்தை தள்ளிவைத்தது. இதன் காரணமாக ஜாக்டோ-ஜியோ அமைப்பில் விரிசல் ஏற்பட்டது. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் புதிய ஒருங்கிணைப்பாளர்களாக மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்கள் தலைமையில் கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்தனர்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் கூறியதாவது:-

நீதிமன்ற உத்தரவை மீறியும், அரசின் உத்தரவை மீறியும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடத்தி வருகிறார்கள். கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கம் பெற்ற உடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் யாருக்கும் விடுமுறை கொடுக்கக்கூடாது என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இன்று (திங்கட்கிழமை) பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விளக்கத்தின்படி அவர்களுக்கு லேசான தண்டனை வழங்கப்படும் அல்லது பெரிய தண்டனையாக தற்காலிக பணி நீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்பட வாய்ப்பு உண்டு.

இவ்வாறு இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

Next Story