‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி திருச்சியில் 16-ந்தேதி பொதுக்கூட்டம் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு


‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி திருச்சியில் 16-ந்தேதி பொதுக்கூட்டம் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2017 9:00 PM GMT (Updated: 10 Sep 2017 7:03 PM GMT)

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

சென்னை,

இதுகுறித்து அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வு முறையை தமிழகத்தால் ஏற்க இயலாது என்று தமிழகமே இன்று ஒரே குரலில் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துப் போராடி வருகிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழர்களின் நலன்களையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் உடன்படாமல் போராடி வந்த ஜெயலலிதாவின் எண்ணமும் ‘நீட்’ தேர்வு தமிழகத்திற்கு ஏற்புடையதல்ல என்பதாகத் தான் இருந்தது.

ஜெயலலிதாவின் விடாமுயற்சியால் கடந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டின் தனித் தன்மையும், உரிமையும் பாதுகாக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் வழியில் இந்த ஆண்டும் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று கடைசி நிமிடம் வரை அனைவரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

மத்திய அரசின் சட்ட அமைச்சரகமும், மனிதவள மேம்பாட்டு அமைச்சரகமும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் முடிவுக்கு வந்துவிட்டன என்றும், எனவே இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு தேவைப்படாது என்றும் கடைசி நிமிடம் வரை பலதரப்பாலும் கூறப்பட்டு வந்தது. இந்த நம்பிக்கைகள் பொய்யாகிப் போனதால் அரியலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா, தனது மருத்துவப் படிப்புக் கனவு தகர்ந்துபோன நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தையை உலுக்கிப்போடும் மரணமாக மாணவி அனிதாவின் மரணம் அமைந்துவிட்டது. மாநிலம் எங்கும் போராட்டங்கள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் கடைசி நிமிடம் வரை பதற்றமும், பரிதவிப்பும் நிலவுவதை தவிர்க்கவும், சமூக நீதி காப்பதற்கான இட ஒதுக்கீட்டிலும், கல்வி வாய்ப்புகளிலும் தமிழகத்திற்கு உள்ள தனித்தன்மையைக் கருதியும் ‘நீட்’ தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றுவது இன்றியமையாததாக உள்ளது.

எனவே, மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்து, பெருவாரியாக மாநில பாடத்திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்விலிருந்து பாதுகாத்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அ.தி.மு.க. (அம்மா) சார்பில் வருகின்ற 16-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 3 மணியளவில், திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நான் சிறப்புரை ஆற்ற உள்ளேன்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Next Story