விழுப்புரத்தில் 17-ந்தேதி பா.ம.க. சார்பில் சமூக நீதி மாநாடு


விழுப்புரத்தில் 17-ந்தேதி பா.ம.க. சார்பில் சமூக நீதி மாநாடு
x
தினத்தந்தி 13 Sep 2017 8:30 PM GMT (Updated: 13 Sep 2017 8:02 PM GMT)

விழுப்புரத்தில் 17-ந்தேதி பா.ம.க. சார்பில் சமூக நீதி மாநாடு நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதி மாநாடு

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எவரும் செப்டம்பர் 17-ந்தேதியை மறக்க முடியாது. அது பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் மட்டுமல்ல, தமிழகத்தில் சமூகநீதி தழைப்பதற்காக 21 பேர் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த நாள். அந்த தியாகம் தான் தமிழ்நாட்டிலுள்ள 108 சமுதாயங்களைச் சேர்ந்த மூன்று கோடி மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து சமூக நீதியை நிலை நிறுத்தியது. வரும் 17-ந்தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் புறவழிச்சாலை ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பா.ம.க. மிகப்பெரிய அளவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த மாநாட்டில் நான் சிறப்புரை ஆற்றுகிறேன் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சமூகநீதி எழுச்சியுரை நிகழ்த்தவிருக்கிறார். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஜெ.குரு ஆகியோர் மிகச்சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்துடன்...

பா.ம.க. சார்பில் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளையும் விஞ்சும் வகையில் இந்த சமூக நீதி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பா.ம.க. சமூக நீதி வரலாற்றில் இந்த மாநாடு நிச்சயமாக ஒரு மைல் கல்லாக அமையும் என்பது நிச்சயமாகும்.

தமிழகத்தின் சமூகநீதிப் பயணத்தில் இன்றைய காலக்கட்டம் என்பது மிகவும் முக்கியமானதாகும். சமூக நீதியையும், சமத்துவத்தையும் குலைப்பதற்கான சதிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. எனவே இந்த மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 


Next Story