கைது செய்யட்டும் பார்த்துக்கொள்கிறோம்: டி.டி.வி.தினகரன் ஜாமீன் கேட்க மாட்டார்
போலீசார் கைது செய்யட்டும் பார்த்துக்கொள்கிறோம் என்றும், டி.டி.வி.தினகரன் ஜாமீன் கேட்கமாட்டார் என்றும் அவரது ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் நேற்று சென்னை அடையாறில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–கேள்வி:– டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வருகிறதே?பதில்:– கட்சிக்காரர்கள் நோட்டீசு வெளியிடுகிறார்கள். அதற்கும், துணை பொதுச்செயலாளருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.
கேள்வி:– தினகரன் தரப்பில் ஜாமீன் போடப்பட்டுள்ளதா?
பதில்:– நாங்கள் ஏன் ஜாமீன் போட வேண்டும். கைது செய்யட்டும் பார்த்துக் கொள்கிறோம். சிறப்பு படை அமைத்து பிடிக்க நாங்கள் என்ன பயங்கரவாதியா?.
கேள்வி:– சசிகலா பரோலில் வர இருக்கும் நேரத்தில் டி.டி.வி.தினகரனை கைது செய்துவிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது என்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறதே?
பதில்:– சசிகலா வெளியே வருவதால் என்ன பிரச்சினை வரப்போகிறது. தீர்ப்புக்கு கட்டுப்பட்டு சிறைச்சாலையில் அவர் இருக்கிறார். அவர் வெளியே வருவதால் என்ன சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்?.
கேள்வி:– சசிகலா பரோலில் வந்தால் அ.தி.மு.க.வில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?பதில்:– அவர் சொந்த விஷயத்துக்காக வருகிறார். அதற்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. ஜெயிலுக்கு என்று தனிச்சட்ட திட்டம் இருக்கிறது. சசிகலா பரோலில் வந்தால் நாங்கள் அவரை சென்று பார்ப்போம். அதுவே ஒரு அரசியல் தானே. இவ்வாறு அவர் பதிலளித்தார்.