தீபாவளியையொட்டி தியாகராயநகரில் புத்தாடை, நகைகள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள் கூட்டம்


தீபாவளியையொட்டி தியாகராயநகரில் புத்தாடை, நகைகள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2017 5:15 AM IST (Updated: 8 Oct 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை மற்றும் நகைகள் வாங்குவதற்கு தியாகராயநகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியன்று மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வகைகளை சாப்பிட்டு உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற 18–ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு 10 நாட்களே உள்ள நிலையில், சென்னையில் தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

சென்னையின் முக்கிய வணிக பகுதியான தியாகராயநகரில் நேற்று புத்தாடைகள், நகைகள் உள்பட பொருட்களை வாங்குவதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை தியாகராயநகர் பகுதி மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது.

குறிப்பாக ரங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாகவே காட்சியளித்தது. தீபாவளியை முன்னிட்டு ஜவுளிக்கடைகள் போட்டிபோட்டு தள்ளுபடி அறிவித்துள்ளதால், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளி கடைகள் மட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மைக்ரோ ஓவன் உள்ளிட்ட பொருட்களை தள்ளுபடி விலையில் மக்கள் வாங்கிச்சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் பொருட்கள் வாங்க வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக தியாகராயநகரில் ஏராளமான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர ஆங்காங்கே உயர்கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலமும் கண்காணித்து வருகின்றனர்.

ரங்கநாதன் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் படங்களை வைத்து உஷாராக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாறுவேடத்திலும் போலீசார் மக்களோடு மக்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

‘சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரியும் நபர்களை கண்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’, ‘பணம் மற்றும் நகைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்’, ‘செல்போனில் பேசியபடி செல்லவேண்டாம்’ என்று ஒலிபெருக்கி மூலமும் போலீசார் அறிவுறுத்தினர்.


Next Story