அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கவர்னரிடம் வழங்குவோம்; டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
புதிதாக பொறுப்பேற்றுள்ள கவர்னரிடம், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வழங்குவோம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் க.பழனித்துரை ‘பாட்டாளி சொந்தங்களே’ நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை மூத்த பத்திரிகையாளர் மாலன் பெற்றுக்கொண்டார். மூத்த பத்திரிகையாளர் ‘கல்கி’ ப்ரியன் வாழ்த்துரை வழங்கினார்.
பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசும்போது, ‘‘உண்மையாகவும், நேர்மையாகவும் அரசியல் செய்பவர் டாக்டர் ராமதாஸ். தமிழகத்தில் அவருடைய கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் பிறந்திருந்தால் அவர் பெரிய தலைவர் ஆகியிருப்பார். பா.ம.க.வின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சாதி கட்சி என்று கூறுகின்றனர். ஆனால் 2 கட்சிகளிடம் கூட்டணியில் இருந்தபோது, சாதி கட்சி என்று யாரும் சொல்லவில்லை. மக்களிடம் எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து வருகிறது. தமிழகத்தை இந்தியாவில் முன்னோடியான மாநிலமாக மாற்றும் வரை ஓயமாட்டோம்’’ என்றார்.டாக்டர் ராமதாஸ் நிறைவு உரையாற்றும்போது, ‘‘யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாததால், இன்றைக்கும் நான் தமிழக மக்களால் பாராட்டி பேசப்படுகிறேன். தமிழகத்தில் ஊழலால் புரையோடிய புண்ணை குணப்படுத்தக்கூடியவர் டாக்டர் அன்புமணி. மக்கள் தமிழக அரசியல் சூழ்நிலையை உற்று கவனித்து வருகிறார்கள். தமிழக மக்களின் புதிய பார்வை அன்புமணி மீது திரும்பியிருக்கிறது. ஜனநாயகம் என்ற பயிரை வளரவிடவேண்டும்’’ என்றார்.
இதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது. ஒரு டாக்டராக டெங்கு காய்ச்சல் குறித்து பல முறை அரசுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். கடந்த 5 நாட்களில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில், டெங்கு காய்ச்சலுக்கு 200–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு பொய்யான தகவல்களை கூறி வருகிறது.
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை அரசு மூடி மறைத்து வருகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்று கூறும் தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.256 கோடி நிதி மட்டும் ஏன் கேட்கிறது? டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளிக்கொண்டுவரும் வகையில் தேவைப்பட்டால் வழக்கு தொடருவோம்.
டெங்கு காய்ச்சலை பொருட்படுத்தாமல் தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு ஆரம்பத்திலேயே வந்திருக்கவேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின்னர் முடிவு செய்யப்படும். சட்டமன்ற தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தினால் வரவேற்போம். வாக்கி–டாக்கி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும். புதிய கவர்னரை சந்தித்து, அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.