பணிமனை இடிந்து பலியான பஸ் ஊழியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம்-அரசு வேலை -முதல்வர்


பணிமனை இடிந்து பலியான பஸ் ஊழியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம்-அரசு வேலை -முதல்வர்
x
தினத்தந்தி 20 Oct 2017 6:52 AM GMT (Updated: 20 Oct 2017 6:52 AM GMT)

பணிமனை இடிந்து பலி பஸ் ஊழியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம்-அரசு வேலை எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் கிராமத்தில், அரசுப்போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனை இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில், கட்டடத்திற்குள் இருந்த  மணக்குடியைச் சேர்ந்த கனி, காலமநல்லூரைச் சேர்ந்த மணிவண்ணன், கீழகாசாக்குடியைச் சேர்ந்த தனபால்,  காளஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன், பாலு, கீழையூரைச் சேர்ந்த சந்திரசேகர், சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கீழப்பெரம்பூரைச் சேர்ந்த முனியப்பன் ஆகிய எட்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

போக்குவரத்துக் கழக பணிமனை இடிந்து விழுந்து, உயிரிழந்த எட்டு  பணிமனை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவத்தில் மூன்று நபர்கள் காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.  இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், அமைச்சர்கள்  ஓ.எஸ்.மணியன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு  உத்தரவிட்டுள்ளேன்.

இந்தத் துயர சம்பவத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு நிகழ்வாக தலா 7.5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1.5 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் நான்  உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு  சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும்  உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Next Story