சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கோஷம்


சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கோஷம்
x
தினத்தந்தி 22 Oct 2017 9:00 PM GMT (Updated: 2017-10-23T00:30:48+05:30)

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று காலை 11.30 மணிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல 5 குழந்தைகள் உள்பட 238 பேர் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறினார்கள்.

விமானத்தில் இறுதிகட்டமாக சோதனை செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானத்தில் ஏற்பட்டு இருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்த பின்னர் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மதியம் 2 மணி வரை விமானம் புறப்பட்டு செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், தங்களுக்கு சாப்பிட எதுவும் வழங்கவில்லை என கூறி கோஷமிட்டனர். இதையடுத்து 3 மணியளவில் அவர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டது.

ஆனால் மாலை 6 மணி வரையில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படவில்லை. இதனால் விமானம் ரத்து செய்யப்படுகிறது. நாளை(அதாவது இன்று) காலை 9 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும். நீங்கள் குடியுரிமை பகுதியில் இருந்து உடமைகளுடன் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவீர்கள் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஏற்க மறுத்த பயணிகள், தங்களை மாற்று விமானத்தில் அனுப்ப வேண்டும். இல்லை என்றால் வேறு விமானத்தில் செல்வதற்கான அனுமதி சீட்டுகளை வழங்க வேண்டும் என கூறி கோஷம் போட்டனர்.

பின்னர் சிலர் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். சிலர் டிக்கெட்டை ரத்து செய்தனர். மற்றவர்கள் ஓட்டல்களுக்கு சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு எற்பட்டது.

Next Story