மீன்பிடித்த போது கப்பல் மோதி விபத்து: உயிர் இழந்த, காணாமல் போனவர்களுக்கு நிதி உதவி
மீன்பிடித்த போது கப்பல் மோதி விபத்து: மீனவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், ஏழுதேசம் சின்னத்துறை மீனவ கிராமம் மற்றும் கேரளா மாநிலம் பூவார் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடந்த அக்டோபர் 11–ந் தேதி, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், வேப்பூர் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், ஆறு மீனவர்களும் கடலில் மூழ்கியதில், 2 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தில், சேவியரின் மகன் ஆன்றனி உயிரிழந்த நிலையில், அவரது உடல் மட்டும் மீட்கப்பட்டது. அவருடன் கடலுக்கு சென்ற பத்ரோசின் மகன் ரெம்மியாஸ் என்ற மீனவர் இதுவரை கரை திரும்பவில்லை. இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
கடலில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கப்பல் மோதிய விபத்தில், உயிரிழந்த ஆன்றனியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும்;
கடலில் மீன் பிடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காணமல் போன பத்ரோசின் மகன் ரெம்மியாஸ் குடும்பத்தின் வறிய நிலையைக் கருத்தில் கொண்டு, அவரின் குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.