கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை வெளியிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை, வருமானவரித்துறை வெளியிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான வருமானவரி சோதனை சசிகலா குடும்ப நிறுவனங்களில் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அதன் நோக்கம் மற்றும் கண்டுபிடிப்பு குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகும் நிலையில் அதுபற்றி விளக்கமளிக்கப்படாதது குழப்பங்களை அதிகரித்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ், சேகர்ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளில் கிடைத்தவற்றின் விவரங்கள் இன்று வரை வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் முறைகேடான வழிகளில் தமிழகத்தை சுரண்டி பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்து வைத்திருப்பதை தமிழக மக்கள் அறிவார்கள். கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் சொத்துக்களை குவித்து வரும் நிலையில், ஒருமுறை சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்ததைத் தவிர, மற்ற நேரங்களில் அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை தான் பார்க்கின்றன.
சசிகலா குடும்பத்தினரை தப்பிக்க விடாமல், அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்டனையை வருமானவரித்துறை பெற்றுத்தர வேண்டும். இதை அரசும், வருமானவரித்துறையும் உணர வேண்டும். சசிகலா குழுவினரிடம் நடத்தப்பட்ட வருமானவரி ஆய்வில் கிடைத்த பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை வருமானவரித்துறை உடனடியாக வெளியிட வேண்டும். மேலும் ஊழல் குற்றமாகவும், கூட்டு சதியாகவும் கருதி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பதுடன், அதற்கு மைக்கேல் டி குன்ஹா போன்ற நேர்மையான நீதிபதி ஒருவரை சிறப்பு நீதிபதியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.