அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பில் தலையிட முடியாது
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பில் தலையிட முடியாது என்று கூறி அதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘தமிழக போக்குவரத்து பிரிவு கூடுதல் டி.ஜி.பி. கடந்த ஆகஸ்டு 24–ந் தேதி வெளியிட்ட உத்தரவில், மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை செப்டம்பர் 1–ந் தேதி முதல் தங்களுடன் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அசல் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், ‘மத்திய மோட்டார் வாகன விதி 139–ன் கீழ் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க தேவையில்லை. அதிகாரிகள் அவற்றை கேட்கும்பட்சத்தில் 15 நாட்களுக்குள் அவற்றை சமர்ப்பித்தால் போதும் என்று கூறுகிறது’ என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும், போக்குவரத்து பாதுகாப்புக்காகவும் இந்த உத்தரவை கூடுதல் டி.ஜி.பி. பிறப்பித்துள்ளார். பொதுநலனுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவில், ஐகோர்ட்டு தலையிட்டால் அது பொதுநலனுக்கு எதிரானதாக மாறிவிடும்.
பெரும்பான்மையான மக்களுக்கு பாதிப்பு வரும்போது அதுதொடர்பாக பொதுநல வழக்கை தாக்கல் செய்யலாம். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுநல வழக்கு என்பதே தவறாக பயன்படுத்தப்படுகிறது. தேவையில்லாமல் தாக்கல் செய்யப்படுகிறது. அதனால் ஐகோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுகிறது.
மோட்டார் வாகனங்களை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி பலர் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். ஓட்டுனர் உரிமமே இல்லாமல் வாகனங்களை பலர் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதை தடுக்கும்விதமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதில் தலையிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.