அனைத்து மணல் குவாரிகளையும் இழுத்து மூடவேண்டும் ஐகோர்ட்டில், அன்புமணி ராமதாஸ் வழக்கு


அனைத்து மணல் குவாரிகளையும் இழுத்து மூடவேண்டும் ஐகோர்ட்டில், அன்புமணி ராமதாஸ் வழக்கு
x
தினத்தந்தி 16 Nov 2017 4:10 AM IST (Updated: 16 Nov 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீர், விவசாயம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–  தமிழகத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை கடந்த 2003–ம் ஆண்டு அரசு ரத்து செய்தது. பின்னர், மணல் குவாரியை தமிழக பொதுப்பணித்துறை நடத்தியது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆற்றுப்படுகைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடுடன், விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 31 இடங்களில் செயல்படும் மணல் குவாரிகளில் இருந்து, தினமும் 8 ஆயிரத்து 300 லாரி லோடுகள் மணல் அள்ளப்படுவதாக பொதுப்பணித்துறை கூறுகிறது. ஆனால், தினமும் பல்லாயிரக்கணக்கான லாரி லோடுகள் மணல் சட்டவிரோதமாக அள்ளப்படுகின்றன.

அரசு ஒரு லாரி லோடு மணலை ரூ.1,030–க்கு விற்கிறது. ஆனால், ஒரு லாரி லோடு மணலை ரூ.50 ஆயிரம் கொடுத்து பொதுமக்கள் வாங்குகின்றனர். மணல் விற்பனையில் இடைத்தரகர்கள் மூலம் மிகப்பெரிய முறைகேடுகள் நடக்கின்றன.

பொதுப்பணித்துறை அதிகாரிகளும், இந்த இடைத்தரகர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றன.

மணல் அள்ளுவதன் மூலம் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக இந்த ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த ஐகோர்ட்டு, தாமிரபரணி, கொசஸ்தலை, பாலாறு ஆகிய ஆறுகளில் மணல் அள்ளத் தடை விதித்தது.

மணல் அள்ளுவதை முறைப்படுத்தும் விதமாக ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த குழுவுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கப்படாததால், நீதிபதி பத்மநாபன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து தொடர்ந்து, சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்கக்கோரி கடந்த ஆகஸ்டு 16–ந் தேதி சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்தேன். விசாரணை கமி‌ஷன் அமைக்கவும் கோரினேன். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கவேண்டும். இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாக மணல் அள்ளி நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைக்க வேண்டும்.

ஆறுகள், நீர் நிலைகள் மற்றும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உடனடியாக அனைத்து மணல் குவாரிகளையும் இழுத்து மூட இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story