ஓட்டல்களில் உணவு வகைகள் விலை குறைக்கப்படவில்லை அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு


ஓட்டல்களில் உணவு வகைகள் விலை குறைக்கப்படவில்லை அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Nov 2017 3:00 AM IST (Updated: 19 Nov 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி குறைந்தும் ஓட்டல்களில் உணவு வகைகள் விலை குறைக்கப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–  கடவுள் வரம் கொடுத்தும், பூசாரி வரம் கிடைக்காத கதையாக மாறியிருக்கிறது உணவகங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பு. அனைத்து வகை நட்சத்திர குறியீடற்ற உணவகங்களிலும் உணவு வகை மீதான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்களை வாடிக்கையாளருக்கு வழங்க பெரும்பாலான உணவகங்கள் முன்வராதது கண்டிக்கத்தக்கது.

ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுவதற்கு முன்பாக ஒரு வாடிக்கையாளர் ரூ.200–க்கு உணவு சாப்பிட்டால் அதற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. சேர்த்து ரூ.236 கட்டணம் செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதே உணவுக்காக வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.210 ஆக குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதன் பயன் நுகர்வோருக்கு கிடைக்கும்.

ஆனால், இப்போது உணவின் விலையை 200 ரூபாயில் இருந்து ரூ.225 ஆக உயர்த்தி, அதன் மீது 5 சதவீதம் ஜி.எஸ்.டி.யாக ரூ.11.25 சேர்த்து 236.25 ரூபாயை உணவகங்கள் வசூலிக்கின்றன. ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்ட நிலையில் உணவுக் கட்டணம் குறைக்கப்படாமல் அதிகரிக்கப்படுவது முறையல்ல.

ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க மறுக்கும் உணவகங்கள் மீது தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும், மத்திய அரசின் கொள்ளை லாபத் தடுப்புத் துறையும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இந்த வி‌ஷயத்தில் இரு அமைப்புகளும் இதுவரை எச்சரிக்கை கூட விடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஜி.எஸ்.டி. வரி விகிதம் நடைமுறைக்கு வந்த 4½ மாதங்களில் உணவகங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி எவ்வளவு?. திருப்பி வழங்கப்பட்ட மூலதனப் பொருட்களுக்கான வரி எவ்வளவு? என்பதை மத்திய அரசால் தெளிவாகக் கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்த வேண்டும்.

அதேபோல், உணவுகளின் விலையை உயர்த்தினால் வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை உணவகங்கள் உணர்ந்து, உணவுகளின் விலையை தாங்களாகவே முன்வந்து குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story