தமிழகத்தில் 31 துணை மின் நிலையங்கள் காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்


தமிழகத்தில் 31 துணை மின் நிலையங்கள் காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:15 AM IST (Updated: 24 Nov 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 ஆயிரத்து 345½ கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட 31 துணை மின் நிலையங்களை, காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்தை சார்ந்த 23 ஊராட்சிகளில் உள்ள 123 குடியிருப்புகளும், உடுமலைப்பேட்டை ஒன்றியத்தை சார்ந்த 3 ஊராட்சிகளில் உள்ள 35 குடியிருப்புகளும் என மொத்தம் 158 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் திருமூர்த்தி அணை, தளி வாய்க்காலை நீர் ஆதாரமாகக்கொண்டு ரூ.54 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 21-ந்தேதி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 1¼ லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் 22 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் வழங்கல் திட்டம், ஆலந்தூர் பகுதியில் உள்ள நந்தம்பாக்கத்தில் ரூ.6 கோடியில் குடிநீர் வழங்கல் திட்டம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து தாம்பரம் வரையிலான சென்னைக்கு தெற்கிலுள்ள பெருநகர உள்ளாட்சி பகுதிகளுக்கு ரூ.90 கோடியே 42 லட்சம் மதிப்பில் 1,200 மி.மீ. விட்டமுள்ள பிரதான குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர் (கிழக்கு) வெள்ளாளர் தெருவில் ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மங்கள் ஏரி பூங்கா, வளசரவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட நெற்குன்றம் காமராஜர் சாலையில் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், காஞ்சீபுரம் மாவட்டம் பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட மடிப்பாக்கம் அம்பேத்கர் தெருவில் ரூ.79 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 188-வது வார்டு அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர், கிழக்கு அவென்யூ சாலையில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம், ஜெ.ஜெ.நகர் (கிழக்கு) ஈ.பி. சாலையில் ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா என மொத்தம் ரூ.202 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 11 திட்டப்பணிகளையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

அதேபோல திருவள்ளூர் மாவட்டம் மணலியில் ரூ.599 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 400/230110 கி.வோ. வளிமக் காப்பு துணை மின் நிலையத்தையும் காணொலிக்காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

மேலும், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நிறுவப்பட்டுள்ள 230/33 கி.வோ. வளிமக் காப்பு துணை மின் நிலையம், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் 3-வது பிரதான சாலையில் நிறுவப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்.

சென்னை திருமங்கலம் தெற்கில் நிறுவப்பட்டுள்ள 110/33 கி.வோ. வளிமக்காப்பு துணை மின் நிலையம் என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 345 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 31 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story