டெல்லியில் போராட்டம் முடிந்தநிலையில் தமிழக விவசாயிகள் ரெயில் மூலம் சென்னை வருகை


டெல்லியில் போராட்டம் முடிந்தநிலையில் தமிழக விவசாயிகள் ரெயில் மூலம் சென்னை வருகை
x
தினத்தந்தி 24 Nov 2017 9:30 PM GMT (Updated: 24 Nov 2017 7:37 PM GMT)

டெல்லியில் போராட்டம் முடிந்தநிலையில், தமிழக விவசாயிகள் ரெயில் மூலம் சென்னை வந்தனர். வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

சென்னை,

விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும், அதை சட்டபூர்வ உரிமையாக்க வேண்டும், கடன் சுமையில் இருந்து விவசாயிகள் முழுமையாக விடுதலை பெற வேண்டும், விவசாயிகளின் கடன்களை பரவலான முறையில் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 20 மற்றும் 21-ந்தேதிகளில் (2 நாட்கள்) அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தில் இருந்து 700 விவசாயிகள் பங்கேற்றனர்.

போராட்டம் முடிந்தநிலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தனர். மனித மண்டை ஓடுகள், எலும்புகள் மற்றும் ஏர் கலப்பைகள் சகிதமாக வந்த விவசாயிகள் ரெயிலில் இருந்து இறங்கியதும், மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் வேளாண் இயக்குனர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, அருகில் உள்ள ஓய்வறையில் அவர்களை தங்க செய்தனர். பின்னர் அய்யாக்கண்ணு தலைமையில் 7 விவசாயிகள் மட்டும் சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். முதல்-அமைச்சர் தனிப்பிரிவிலும் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அய்யாக் கண்ணு கூறுகையில், “விவசாயிகள் இந்தியாவின் ஆணிவேர் என்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தயங்குகிறது. ஒவ்வொரு முறை போராட்டத்தின்போதும் நாங்கள் விடுக்கும் கோரிக்கை வெறும் கோரிக்கையாக மட்டுமே இருக்கிறது. எனவே இந்தமுறையாவது விவசாயிகளின் வேண்டுகோளை அரசு ஏற்கவேண்டும்”, என்றார்.

Next Story