தென் தமிழகத்தில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் பேட்டி


தென் தமிழகத்தில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2017 4:30 AM IST (Updated: 25 Nov 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை மீண்டும் வலுப்பெறுவதாகவும், தென் தமிழகத்தில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் மழை ஓய்ந்தது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 7-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை வலு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை மீண்டும் வலுப்பெற்று மழைக்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று (நேற்று) தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. மேலும் அதனுடன் தொடர்புடைய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த தாழ்வு பகுதி வருகிற 25, 26, 27-ந் தேதிகளில் மேற்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக 25-ந் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

தென் தமிழகத்தில் 26-ந் தேதி (நாளை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று (நேற்று) வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 33 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 26 செ.மீ. மழை தான் பெய்து இருக்கிறது. இது வழக்கத்தை விட 19 சதவீதம் குறைவு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ராமேசுவரம், பாம்பன் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

Next Story