புயலில் சிக்கி கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 346 பேர் மீட்பு ராணுவம் தகவல்


புயலில் சிக்கி கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 346 பேர் மீட்பு ராணுவம் தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2017 5:00 AM IST (Updated: 4 Dec 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி’ புயலில் சிக்கி கடலில் தத்தளித்த தமிழகத்தை சேர்ந்த 346 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர் என்று ராணுவத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க 129 மீன்பிடி படகுகளில் சென்ற 1,247 மீனவர்கள் மாயமானது தெரியவந்தது. அதில் தற்போது 32 படகுகளும் அதில் சென்ற 346 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கேரளா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடகா, கேரளா, கோவா மற்றும் மராட்டிய மாநிலங்களில் உள்ள மெரியா பண்டர், ரத்னகிரி மற்றும் தேவ்கார் ஆகிய துறைமுகங்கள் மற்றும் கடலோர காவல் படைக்கான முகாம்களில் தமிழகத்தைச் சேர்ந்த 25 படகுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர கேரளாவைச் சேர்ந்த 80 மீன்பிடி படகுகள், கர்நாடகாவில் உள்ள 45 படகுகள், கோவாவைச் சேர்ந்த 15 படகுகளும் இங்கு பாதுகாப்பாக உள்ளது. இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் மற்றும் வைபவ், அபிராஜ், ஆதீஸ் ஆகிய கப்பல்களும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

கேரளா மாநிலம் விழிஞ்ஞம் கடல்பகுதியில் தத்தளித்த 15 பேர் சாரதி கப்பல் மூலம் மீட்டுள்ளனர். அரியமான், அமிர்தியா, அபிநவ் ஆகிய கப்பல்கள் மூலம், மற்றொரு பகுதியில் தத்தளித்த 19 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். லட்சத்தீவு அருகில் உள்ள சுகல்பார் தீவு அருகில் தத்தளித்த 4 மீனவர்கள் ஷார் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சமார் கப்பல் மூலம் கடலில் தத்தளித்த 3 பேரும், சலாய்தேன் என்ற படகும் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கன்னியாகுமரி கடல் பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. 11 கப்பல்களும், 2 விமானமும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மராட்டியம், லட்சத்தீவு, மினிகாய் தீவு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story