பிரதமர் நரேந்திரமோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
‘சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது’ என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
‘சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது’, என்று இந்திய உருக்காலை ஆணையத்துக்கு அறிவுறுத்தும்படி நான் உங்களுக்கு கடந்த ஏப்ரல் 26–ந்தேதி எழுதிய கடிதம் மூலம் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். ஆனால் கடந்த ஜூன் மாதத்திலேயே, மத்திய அரசாங்கம் ஒரு சட்ட ஆலோசகர், சொத்து மதிப்பீட்டாளர், பரிமாற்ற ஆலோசகரை நியமிக்கப்பட்டதாகவும், உலகளாவிய டெண்டர் கோரி சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் பணியை விரைவுபடுத்த ஒரு ஆலோசனை குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் சேலம் உருக்காலை தொழிலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
சேலம் உருக்காலை தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் ஒரு நல்அடையாளமாக திகழ்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை அடிவாரத்தில் 9 கிராமங்களில் இருந்து 15.5 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை தமிழக அரசு கையகப்படுத்தியது.
இவ்வளவு நிலத்தை கையகப்படுத்த முடிந்ததன் காரணம், இந்த தொழிற்சாலை ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பது மட்டுமல்லாது, இதன் மூலம் தமிழக மக்களும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பலன் கிடைக்கும் என்பதால் தான். சேலம் உருக்காலை தொழிற்சாலையின் கையிருப்பு இன்றைய நிலவரப்படி அதிக விலைமதிப்பு கொண்டதாகும்.
இந்த உருக்காலை 2 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வழங்குகிறது. இந்த தொழிற்சாலை நிதிநிலை 2015–2016–ம் ஆண்டை விட இப்போது 2016–2017–ம் ஆண்டு சீரடைந்து உள்ளது என்று என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சேலம் உருக்காலை விரிவாக்கத்திற்காக எளிய கடன், மின்சார வரிவிலக்கு, சுற்றுச்சூழல் மானியம் போன்ற பல்வேறு ஊக்கத்தொகையாக தமிழக அரசு ரூ.2 ஆயிரத்து 5 கோடி அளவில் உதவி உள்ளது. சேலம் உருக்காலை நஷ்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். அது தங்களுடைய செயல்திறனை மேம்படுத்தவும், லாபத்தில் இயங்கவும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இதை செய்தால் சேலம் உருக்காலை நிச்சயம் ஒரு மாற்றம் கண்டு லாபத்தில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாக மீண்டும் மாறும். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் விரைவாக கவனம் செலுத்தி, இரும்பு அமைச்சகத்துக்கும், இந்திய உருக்காலை ஆணையத்துக்கும், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.