தோல்வி பயம் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அ.தி.மு.க. மீது குற்றச்சாட்டு தம்பிதுரை பேட்டி
தோல்வி பயம் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அ.தி.மு.க. மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன என்று தம்பிதுரை கூறினார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ராவை சந்தித்து அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளித்த பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
எதிர்க்கட்சிகள் சில பிரச்சினைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க.வினரை தாக்குவது, தவறான தகவல்களை போலீசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் தருவது போன்ற அராஜக செயல்களை வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் தோல்வி பயம் காரணமாக தொடர்ந்து செய்து வருகின்றன. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போலீஸ் மற்றும் துணை ராணுவத்தை முழு வீச்சில் பயன்படுத்தி சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி, எந்த அச்சமும் இல்லாமல் வாக்காளர்கள் ஓட்டுபோடுவதற்கும், தேர்தல் நியாயமான முறையில் நடைபெற தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்பதை தேர்தல் அதிகாரியிடம் வேண்டுகோளாக வைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் கூறும்போது, ‘‘தற்போது விஞ்ஞானப்பூர்வமாக பண வினியோகத்தில் அமைச்சர்கள் இறங்கி உள்ளனர். தேர்தல் ஆணையம் நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொருளாளர் கல்யாண சுந்தரம் கூறும்போது, ‘‘ஏற்கனவே பணப்பட்டுவாடா புகாரால் தான் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கும்போது, மீண்டும் மதுசூதனன், டி.டி.வி.தினகரன், மருதுகணேஷ் ஆகியோரே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த 3 வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பணப்பட்டுவாடாவை தடுக்க ஒவ்வொரு தெருக்களிலும் 50 துணை ராணுவ வீரர்களை நிறுத்த வேண்டும்’’ என்றார்.