தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந்தாலும் ‘டெபாசிட்’ இழப்பார்கள்
தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந்தாலும் ‘டெபாசிட்’ இழப்பார்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.
காசிமேடு கடற்கரை சாலையில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், நாகூரான் தோட்டம், சி.ஜி.காலனி, வி.பி.கோவில் தெரு, ரெட்டைக்குழி தெரு, மேயர் பாசுதேவ் தெரு, மண்ணப்பன் தெரு ஆகிய இடங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். செரியன் நகரில் திறந்த ஜீப்பில் நின்றபடி அவர் பேசியதாவது:–
பல்வேறு கட்சிகள், சமுதாய அமைப்புகள், ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு வெற்றியை தேடித்தர வேண்டும் என்பதற்காக இங்கு வந்து இருக்கிறோம். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தமிழகத்தில் பொதுத்தேர்தல் வர இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி இருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு இந்த வெற்றி ஒரு அடித்தளமாக அமையும்.
ஜெயலலிதா இந்த தொகுதியில் வெற்றி பெற்று முதல்–அமைச்சராகவும் ஆனார். ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்த போது நினைவு இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், மேல்மட்டத்தில் இருப்பவர்கள் இதை சொல்ல வேண்டாம் என்று சொன்னதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து தங்களை இரட்டைக்குழல் துப்பாக்கி என்று கூறுகின்றனர். அவர்கள் இரட்டைக்குழல் துப்பாக்கி அல்ல. சசிகலாவும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியாக இருந்து ஜெயலலிதா மரணத்தில் உண்மையை மறைத்து உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே பணப்பட்டுவாடா புகாரில் தள்ளி வைக்கப்பட்டது. அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த புகாரில் அவர்கள் மீது துளி அளவு கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது. ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் பணப்பட்டுவாடா நடந்து இருக்கிறது. கடந்த முறை போலவே எடப்பாடி பழனிசாமியே தலைமை ஏற்று இதை செய்து வருகிறார் என்று ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம்.
கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் சரி, எத்தனை குட்டிகர்ணம் போட்டு உருண்டு புரண்டாலும் சரி தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந்தாலும் ‘டெபாசிட்’ இழப்பார்கள். அ.தி.மு.க.வின் எந்த அணியும் ‘டெபாசிட்’ வாங்காது. ஆகவே நம்முடைய வேட்பாளர் மருதுகணேசுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நீங்கள் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.