ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் மாலையுடன் ஓய்ந்தது


ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் மாலையுடன் ஓய்ந்தது
x
தினத்தந்தி 19 Dec 2017 11:42 AM GMT (Updated: 19 Dec 2017 11:42 AM GMT)

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் பிரசாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.


சென்னை,


ஆர்.கே.நகர் தொகுதியில் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மற்றும் சசிகலா உறவினர் டி.டி.வி.தினகரன் உள்பட 59 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக திருவிழா போல் நடந்து வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 903 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 232 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 99 பேரும் ஆவார்கள். மொத்த வாக்காளர்களில் 20 வயதில் இருந்து 29 வயது உடைய இளம் வாக்காளர்கள் 58 ஆயிரத்து 881 பேர் உள்ளனர். இந்த இளம் வாக்காளர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறார்கள். 

வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 256 வாக்குசாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரிக்கு எடுத்து செல்லப்படும். தற்போது ராணிமேரி கல்லூரி பொன் விழா மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான யாதொரு பிரசார பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அதன்படி மாலை 5 மணியுடன் அங்கு பிரசாரம் முடிவுக்கு வந்தது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை வினியோகம் செய்வதாக புகார்கள் எழுந்தது. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அ.தி.மு.க. வினர் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 

விரைவில் ஆய்வு மேற்கொண்டு, பணப்பட்டுவாடா நடந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Next Story