இடைத்தேர்தல் முறைகேடுகளை ஒடுக்க சட்டத்திருத்தம் தேசிய அளவில் ஆலோசனை


இடைத்தேர்தல் முறைகேடுகளை ஒடுக்க சட்டத்திருத்தம் தேசிய அளவில் ஆலோசனை
x
தினத்தந்தி 19 Dec 2017 10:30 PM GMT (Updated: 19 Dec 2017 8:12 PM GMT)

இடைத்தேர்தல் முறைகேடுகளை ஒடுக்குவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவருவது பற்றி தேசிய அளவில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி கூறினார்.

சென்னை, 

இந்தியா முழுவதும் நடக்கும் இடைத்தேர்தல் முறைகேடுகளை ஒடுக்குவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவருவது பற்றி தேசிய அளவில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

சென்னையில் ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

சட்டத்திருத்தம்

இடைத்தேர்தல் விதிமீறல்கள், தமிழகத்திலும் கர்நாடகாவிலும் அதிகம் உள்ளன. விதிமீறல்களை ஒடுக்குவதற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் சட்டத்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.

இதுபற்றி தேசிய அளவில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அதற்கான குழு ஒன்றில் நானும் இடம் பெற்றுள்ளேன். இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிக்குள் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கக்கூடாது என்ற அம்சம் விவாதிக்கப்படுகிறது.

தேர்தல் நடத்தாமலேயே

இறந்துபோன எம்.எல்.ஏ.யின் கட்சியில் இருந்து ஒருவரை அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக, இடைத்தேர்தலை நடத்தாமலேயே அறிவிக்க முடியுமா? அல்லது, இறந்துபோன எம்.எல்.ஏ.வின் மாற்று வேட்பாளராக இருந்தவரை, எம்.எல்.ஏ.வாக அறிவிக்க முடியுமா? என்பதுபோன்ற அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டும்.

ஆனால் இதிலும் பிரச்சினைகள் உள்ளன. சில குற்றங்களுக்கு வழி ஏற்படுத்திவிடக்கூடாது. இந்த விஷயத்தில் பல கோணத்தில் விவாதிக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.

ஆர்.கே.நகர் தேர்தலுக்காக ரூ.20 லட்சம் செலவில் 225 ரகசிய கண்காணிப்பு கேமராக்களை வாங்கியிருக்கிறோம். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.

விருதுக்கு பரிந்துரை

ஆர்.கே.நகரில் பார்வையாளர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர். அதிலும் குறிப்பாக ஷீல் ஆஷிஸ் என்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி உள்பட 3 பேரின் பணி மெச்சத்தக்க அளவில் உள்ளது.

சில நாட்களில் ஷீல் ஆஷிஸ் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டு அதிகாலை 4 மணிக்குத்தான் தூங்கச்செல்கிறார். பல வீடுகளுக்குள் நுழைந்து, மாடி வரை சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். வெளி ஆட்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார்.

50 பெண்களால் அவர் முற்றுகையிடப்பட்டு, கடுமையான வார்த்தைகளால் திட்டப்பட்டார். ஆனாலும் அவர் அனைத்தையும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளார். அவற்றை ஆதாரங்களாக இணைத்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார்களை அனுப்பி இருக்கிறார். அவருக்கு விருது வழங்குவதற்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story