ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர்


ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:57 AM GMT (Updated: 20 Dec 2017 4:57 AM GMT)

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆஜர் ஆனார்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையத்தில், சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் முரளிதரன் நேற்று ஆஜரானார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறக்கும் வரை முரளிதரன் சென்னை மருத்துவக்கல்லூரி டீனாக இருந்து வந்தார்.

அரசு மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்தியதன் அடிப்படையில், ஜெயலலிதாவை சிகிச்சையின் போது பார்த்தீர்களா? என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அரசு மருத்துவர்கள் குழு அவ்வப்போது தகவல் தெரிவித்தார்களா? எனவும் நீதிபதி அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிசிக்சைகள் தொடர்பான விவரங்களை அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட மருத்துவர் குழு தன்னிடம் தெரிவிக்கவில்லை எனவும் கூறி உள்ளார்.

இதன்பின்பு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையில் உள்ள சில சந்தேகங்களை மருத்துவர் முரளிதரனிடம் நீதிபதி கேட்டார். அந்த சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார். சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளரும், ஜெயலலிதாவின் ஆலோசகராகவும் இருந்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆஜர் ஆனார்.

எழிலகத்தின் கலசமகாலில் உள்ள ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்த உள்ளார்.

Next Story