செல்போன் தகராறில் 8-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை சக மாணவன் வெறிச்செயல்


செல்போன் தகராறில் 8-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை சக மாணவன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 22 Dec 2017 2:00 AM IST (Updated: 22 Dec 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே செல்போன் வாங்கிய தகராறில் பள்ளி மாணவனை, சக மாணவனே அடித்துக்கொலை செய்துள்ளான். தலைமறைவான மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த வேப்பங்கால் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனிடம் விசாரித்தபோது, தங்களுடன் படிக்கும் சோழமூர் ராமாவரம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுடன் இருவரும் சென்றதாகவும், லப்பை கிருஷ்ணாவரம் அருகே சென்றபோது அந்த மாணவன், சந்தோஷை கட்டையால் தாக்கியதாகவும், இதனால் தான் வீட்டுக்கு ஓடி வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளான். அங்கு சென்று பார்த்தபோது சந்தோஷை காணவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் அங்குள்ள ஒரு கால்வாயில் சந்தோஷ் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட சந்தோஷ் தனது செல்போனை, தன்னுடன் படிக்கும் சோழமூர் ராமாவரம் பகுதியை சேர்ந்த மாணவனுக்கு விற்றுள்ளான். இதில் அந்த மாணவன் 500 ரூபாய் பாக்கி வைத்ததால் சந்தோஷ் அடிக்கடி கேட்டுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன், கட்டையால் தாக்கி சந்தோஷை கொலை செய்து கால்வாயில் பிணத்தை வீசி சென்றது தெரியவந்தது. தலைமறைவான மாணவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story