நச்சுக்கழிவுகள் கலக்கும் காவிரியை தூய்மைப்படுத்த தனித் திட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரியை தூய்மைப்படுத்த தனித்திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தென்னிந்திய நதிகளில் அதிக அளவு நச்சுக்கழிவுகள் கலக்கும் காவிரியை தூய்மைப்படுத்த தனித்திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
காவிரி புனித நதி என்ற நம்பிக்கை சிதையும் வகையில் தென்னிந்திய நதிகளில் காவிரியில் தான் மிக அதிக அளவில் நச்சுக்கழிவுகள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. காவிரியில் கலக்கும் மாசுகள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், மாசு கலப்பதை தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை நடத்திய ஆய்வுகளில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன. காவிரி ஆற்றில் இருந்து ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு ஓர் ஆண்டுக்கு 76.9 டன் வீதம் நச்சு மற்றும் ரசாயனப் பொருட்கள் வங்கக்கடலில் கலப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
கங்கை ஆறு மாசுபட்டுள்ள நிலையில், அதை சீரமைக்க ரூ.20 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதைவிட 600 மடங்கு அதிக மாசு கலக்கும் காவிரியை தூய்மைப்படுத்த எந்தத் திட்டமும் வகுக்கப்படாதது வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் காவிரியை காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும்.
எனவே, காவிரியைத் தூய்மைப்படுத்துவதற்காக தனித் திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story